இந்த விசுவாச குறிப்புகள் வேத அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது. சபையின் ஒருமைப்பாட்டை காக்கவும் பலப்படுத்தவும் (எபேசியர் 4:1-6 – ஒரே விசுவாசம்) இந்த சபையின் அடிப்படை விசுவாசம் எது என்று அறிந்திருப்பது மிக அவசியம்.
1.தேவன்
தேவன் ஒருவர் , அவர் தன்னை மூன்று நபர்களாய் வெளிப்படுத்துகின்றார்: பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர். அவர் (தேவன்) பரிசுத்தர், சர்வ வல்லமையுள்ளவர், சர்வ அதிகாரமுடையவர், அன்புள்ளவர், கிருபையுள்ளவர், இரக்கமுள்ளவர், பொறுமையுள்ளவர், நீதியுள்ளவர், எல்லாவற்றையும் அறிந்தவர், எங்கும் வாசம் பண்ணுகிறவர்…
(1.தீமோத்தேயு 2:5a, மத்தேயு 3:16-17, யோவான் 10:30, ரோமர் 8:9)
2.வேதம்
வேதத்தில் உள்ள 66 புத்தகங்களும் குறைபாடற்ற தேவ வார்த்தையாயிருக்கிறது. தேவமனிதர்கள் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு எழுதினார்கள். இந்த உலகத்தில் வாழும் வாழ்க்கைக்கு, வேதம் பூரணமான மற்றும் போதுமான வழிகாட்டியாக இருக்கிறது.
(2.தீமோத்தேயு 3:16, 2.பேதுரு 1:19-21, சங்கீதம் 19:8-9, சங்கீதம் 119:105)
3.மனிதனின் சீரழிவு
தேவமகிமைக்காய் படைக்கப்பட்ட மனிதன் பாவத்தின் நிமித்தம் அந்த குறிக்கோளை அடையவில்லை. மனிதன் சுபாவத்தில் பொல்லாதவனும் பாவம் நிறைந்தவனுமாயிருக்கிறான். இதினிமித்தம் அவன் கெட்டுபோனவனாயிருக்கிறபடியால் தேவ நீதிக்கு முன்பு ஒருநாளும் நிலைநிற்கமுடியாது. பாவத்தினால் அவனுக்கு வரும் விளைவு நித்திய மரணம்.
(சங்கீதம் 14:1-3, ரோமர் 3:23, ரோமர் 6:23a)
4.தேவசெயல்
மனிதன் கெட்டுப்போகிறது தேவனுக்கு பிரியம் அல்ல. உலகத்தை அவர் நேசிக்கிறபடியால், பாவிகளை மீட்பதற்கு தன்னுடைய ஒரே பேரான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை உலகத்திற்கு அனுப்பினார்.
(எசேக்கியேல் 33:11, 1.தீமோத்தேயு 2:4, யோவான் 3:16)
5.கிறிஸ்து தரும் இரட்சிப்பு
எல்லாருக்கும் தேவன் இந்த கிருபையின் செயலை அன்பளிக்க விரும்புகிறார். இயேசு கிறிஸ்து எனது பாவங்களுக்காய் மரித்து உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசித்து, மனந்திரும்பி, அவர் தரும் கிருபையின் அன்பளிப்பை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ளுகிறவன், தேவனுடைய பிள்ளையாக மாற்றப்படுகிறான்.
(தீத்து 2:11, ரோமர் 10:9, யோவான் 1:12, அப்போ. 2:38)
6.புது ஜீவியம்
மறுபடி பிறந்த மனிதன் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு சபையில் அங்கமாக இணைக்கப்படுகிறான். மறுபடி பிறந்த மனிதன் பரிசுத்த ஆவியானவர் தங்கும் ஆலயமாக இருக்கிறான். ஒவ்வொரு தேவபிள்ளையும் கிருபையினால் விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டபின், அவர் (தேவன்) ஆயத்தப்படுத்தின நற்கிரியைகளை செய்வதற்கு அழைக்கப்பட்டிருக்கிறான். கர்த்தருக்குள், அவரை அறிகிற அறிவிலும் கிருபையிலும் அனுதினமும் வளருவதே புது மனிதனின் நோக்கமாக இருக்கவேண்டும். புது மனிதன், அவனுக்குள் தங்கும் பரிசுத்த ஆவியானவரிடம் இருந்து, தேவனை மகிமைப்படுத்தி வாழ தேவைப்படுகிற பெலத்தை அனுதினமும் பெற்றுக்கொள்ளுகிறான்.
(மாற்கு 16:16a, மத்தேயு 28:19-20, அப்போ. 2:41, 1.கொரிந்தியர் 6:19, எபேசியர்; 2:8-10, 2.பேதுரு 3:18, கலாத்தியர் 5:16-18, எபேசியர் 5:18b)
7.சபை
சபை, கிறிஸ்து தன்னுடைய விலையேறப்பெற்ற இரத்தத்தால் சம்பாதித்துக்கொண்ட அவருடைய சொந்தமாக இருக்கிறது. அவர் சபைக்கு தலையாயிருக்கிறார். சபை கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறது. சபை, கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடி ஐக்கியப்பட்டு
- தேவனை ஆராதிக்கும் (பாடல்கள், ஜெபங்கள்) இடமாகவும்,
- கிறிஸ்துவின் மரணத்தையும் உயிர்தெழுதலையும் நினைவுகூரும் (இராப்போஜனம்) இடமாகவும்,
- அவருடைய வார்த்தையை கேட்கும் (செய்தி) இடமாகவும்
இருக்கிறது.
சபை ஸ்திரப்படுவதற்கும், தேவனை மகிமைப்படுத்துவதற்கும் தேவ ஆவியானவர் சபையில் தமது சித்தப்படி விதம் விதமான வரங்களை பகிர்ந்தளித்திருக்கிறார்.
(எபேசியர்; 5:25b, அப்போ. 20:28, எபேசியர் 5:23b, 1.கொரிந்தியர் 12:12, அப்போ. 2:42, 1.கொரிந்தியர் 12:11)
8.எதிர்காலம்
எந்த நொடிப்பொழுதிலும் இயேசு கிறிஸ்து மறுபடியும் வருவார். தேவபிள்ளைகள் ஆயத்தமாகவும், விழித்துக்கொண்டும்; இருக்கவேண்டும். தேவனை விசுவாசிக்காதவர்கள் நித்திய ஆக்கினைத்தீர்ப்பை பெற்றுக்கொள்வார்கள். தேவபிள்ளைகள், நித்திய ஆசீர்வாதத்தில் தேவனோடு நித்தியத்தில் இருப்பார்கள்.
(அப்போ. 1:11, 1. தெசலோனிக்கேயர் 5:6, யோவான் 14:2-3, மாற்கு 16:16, 2.தீமோத்தேயு 4:8)
